Friday, 26 November 2010

மாவீரர் தோழனுக்காய்..




கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே
கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி
கடலளவு கருணை இல்லாவிடினும்‍‍‍ _சிறு
கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு

விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில்
வீர வரலாறு எழுதினாயேடா தோழா
வீர வரலாறு எழுதினாயே...

தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய்
தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா
தினம் தினம் சிலுவை சுமந்தாயே...

உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும்
ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா
இன்னுயிரை ஈய்ந்தாயே...

கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது
கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில்
குண்டு சுமந்தாயேடா தோழா
குண்டு சுமந்தாயே...

இரக்கப்பட்டு விடும் கண்ணீரையே
இழிவாகப் பேசுவோர்க்காய்
இரத்தம் சிந்தினாயே தோழா
இரத்தம் சிந்தினாயே...

லாண்ட்குறூசர் முதல் லக்ஸறி வாழ்க்கை தான்
லட்சணம் என வாழும் மனிதர் தம்மில்
லட்சியத்திற்காக உயிரை விட்டாயே தோழா
லட்சியத்திற்காக உயிரை விட்டாயே...

பாழாய்ப்போன இனத்திற்காய் நீ பட்டதெல்லாம் போதும்
மீண்டுமொரு ஜென்மம் இருந்தால் இந்த பாவிகள் மத்தியில்
பிறந்திடாதையடா தோழா
பிறந்திடாதை...

No comments:

Post a Comment